இன்று கூடுகிறது அதிமுக தொகுதி பங்கீடு குழு..!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் அதிமுக முதன் முறையாக தொகுதிபங்கீடு குழு கூட்டத்தை இன்று கூட்டுகிறது.
தொகுதி பங்கீடு குழுவில் கே.பி. முனுசாமி,திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி,வேலுமணி, பென்ஜமின் ஆகிய 5 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்த குழுவினர் இன்று காலை கூடி தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர்.
ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த சூழலில் அதிமுக வசம் தற்போது வெகு சில கட்சிகள் மட்டுமே கூட்டணியில் உள்ளன.
குறிப்பாக புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே அதிமுக கூட்டணியில் உள்ளன. இன்று காலை 9.30 மணிக்கு நடக்கும் தொகுதி பங்கீடு குழுவில் எந்த கூட்டணி கட்சிகளை எந்த தேதியில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்க அழைக்கலாம் என்று விவாதிக்கப்பட உள்ளது.
கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட அதிமுக தற்போது பாஜகவுடனான மோதல் போக்கு காரணமாக வெளியேறியுள்ளது. இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் பாமக கட்சிகள் தொடர்கின்றனர்.
இதேபோன்று காலை 10 மணிக்கு தேர்தல் பிரசார குழுவும், நண்பகல் 12 மணிக்கு விளம்பர குழுவும் ஆலோசனை நடத்த உள்ளன. தற்போது வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக வேகப்படுத்தி வரும் நிலையில், இறுதிகட்ட முடிவை அக்கட்சியின் பொதுச்செயலாளரே எடுக்க இருக்கிறார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுக தொண்டர்கள் தன்னுடைய பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக தலைமை அறிவித்துள்ள குழுக்கள் டம்மி குழுக்கள் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




