சென்னையில் இன்று தொடங்குகிறது உலக முதலீட்டாளர் மாநாடு..!
தமிழ்நாட்டை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதனடிப்படையில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு முதலீடுகளை ஈர்த்தார். இதன் தொடர்ச்சியாக, சென்னையில் இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது.
இதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தகமையத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 300 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய முதலீடுகள் மட்டுமின்றி சிறு, குறு மற்றும் நடுத்தர துறைகளிலும் முதலீடுகளை கவர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பதிவு செய்துள்ள நிலையில், 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குகொள்ள உள்ளனர். சிங்கப்பூர், தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்கேற்பாளர்களாக உள்ளனர்.
மாநாட்டின் ஒருபகுதியாக பல்வேறு துறைகளில் சார்ந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவோர்கள் சந்திப்பும் நடைபெறுகிறது. இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு இதுவரை இந்தியா காணாத ஒரு அறிவுத் திருவிழாவாக இருக்கும் என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் மாணவர்களும் இளைஞர்களும் இந்த மாநாட்டை நேரில் காண வேண்டும் என்றும் மாநாட்டில் நடைபெறும் அமர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





