வெள்ளத்தை பயன்படுத்தி வீடு, கார்களை குறி வைக்கும் திருட்டு கும்பல்..!
சென்னையில் மழைநீரில் மூழ்கியதால் மக்கள் வெளியேறிய வீடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய கார்களை குறிவைத்து திருட்டு நடைபெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெருமழை, சென்னையின் பல முக்கிய பகுதிகளை பதம் பார்த்துவிட்டது. சுமார் 36 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால், பள்ளிக்கரணை, வேளச்சேரி, வியாசர்பாடி, மேடவாக்கம், முடிச்சூர் பகுதிகளில் இருக்கும் வீடுகளை முதல் மாடி வரை பெருமழை வெள்ளம் மூழ்கடித்தது.
மழை வெள்ளத்தில் யாரும் வரமாட்டார்கள் என்பதை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொண்ட திருடர்கள், புறநகர் பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளைத்தான் குறிவைப்பதாக கூறுகின்றன தகவல்கள். எனவே, தண்ணீர் சூழ்ந்த வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சென்னையிலேயே வேறு இடங்களில் இருந்தால் அவ்வப்போது போய் பார்த்து வருவது நல்லது. அப்படி வீட்டை பார்க்கப் போகும்போது நகையோ, பணமோ இருந்தால் அவற்றை கையோடு எடுத்துச் செல்வது மிகவும் நல்லது..வெளியூரில் இருந்தால், உள்ளூர் காவல் நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
வேளச்சேரி சாய்பாபா நகரில் மொட்டை மாடியில் தாங்கள் இருந்தபோதே, கீழே கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததாக கூறியுள்ளது ஒரு குடும்பம். தங்களது சத்தம் கேட்டு திருட்டுக் கும்பல் தப்பி ஓடிவிட்டதாக விவரித்துள்ளனர். காவல்நிலையத்தில் இதுவரை எந்த புகாரையும் கொடுக்கவில்லை.
எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற வகையில் திருடும் ஈரமில்லா மனிதர்களை கட்டுப்படுத்த, காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டியது அவசியம். தண்ணீர் சூழ்ந்திருக்கிறதே என்பதற்காக, அப்படியே விட்டுவிடாமல் படகில் சென்றாவது ரோந்து செய்ய வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.






