17 நாட்கள் போராட்டம்..உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 பேரை மீட்டது எப்படி..?
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின்போது கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் வெளியேறமுடியாமல் சிக்கினர்.
41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவர்களுக்கு உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன், உணவு, தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டன. நவீன இயந்திரங்கள் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், எலி துளை சுரங்கம் தோண்டும் முறை பயன்படுத்தப்பட்டது.
குறுகிய விட்டம் கொண்ட சுரங்கங்களைத் தோண்டுவதில் வல்லவர்களான எலிவளை சுரங்கத் தொழிலாளர்களை பயன்படுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான சுரங்கம் தோண்டப்பட்டது.
தீவிரமாக நடைபெற்ற இந்த பணி நிறைவடைந்த நிலையில், NDRF மற்றும் SDRF படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு, முதற்கட்டமாக 15 தொழிலாளர்களை ஒவ்வொருவராக மீட்டு வெளியே அழைத்து வந்தனர். சுரங்கத்தின் பிரதான பகுதியில் காத்திருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில், மற்ற 26 தொழிலாளர்களையும் மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.மாலை 4 மணிக்கு தொடங்கிய மீட்பு நடவடிக்கைகள், இரவு 9 மணி வரை நீடித்தது.
ஒருவர் பின் ஒருவராக மற்ற 26 தொழிலாளர்களையும் மீட்பு படை வீரர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.முதலுதவி அளிக்கப்பட்டதில் அனைத்து தொழிலாளர்களும் நலமுடன் இருப்பது தெரியவந்தது. உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்
.
தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதால் உத்தரகாசி மக்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனியடையே பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியுடன் தொலைபேசியில் உரையாடி மீட்புநிலவரங்களை கேட்டறிந்து பாராட்டு தெரிவித்தார்.






