--- --:--:-- --

இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது – மோடி

4

எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

 

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரும் பிரதமர் மோடி, அடுத்த வாரம் அமெரிக்க பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு ஒரு வாரம் முன்னதாகவே இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

 

அப்போது பேசிய அவர், பிபோர்ஜாய் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் பகுதி விரைவில் மீண்டெழும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பேரிடர் மேலாண்மையில் இந்தியாவின் செயல்பாடுகள் பிற நாடுகளுக்கு முன் உதாரணமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். சத்ரபதி சிவாஜி நீர்மேலாண்மை மற்றும் கடற்படைக்காக செய்த பணிகள் இந்திய வரலாற்றின் பெருமையை இன்றளவும் உயர்த்தியிருப்பதாக புகழாரம் சூட்டினார்.

 

காசநோயை 2025க்குள் ஒழிக்க தீவிரமாக பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். 1970களில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இந்திய வரலாற்றில் அது ஒரு இருண்ட காலம் என்றும் லட்சக்கணக்கான மக்கள் அவசரநிலையை தங்கள் முழு பலத்துடன் எதிர்த்ததாகவும் கூறினார்.

 

ஜனநாயகத்தை ஆதரிப்பவர்கள் அந்த நேரத்தில் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அதனை நினைத்து பார்த்தால் இன்றும் மனம் நடுங்குவதாகவும் பிரதமர் வேதனை தெரிவித்தார். யோகாவை தங்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon