--- --:--:-- --

திருச்சியில் மது அருந்திய இருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு..!

3

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டாஸ்மாக்கில் மது அருந்திய இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சன்குறிச்சியை சேர்ந்தவர் முனியாண்டி. கொத்தனார். அதேபகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமார். இருவரும் ஒன்றாக சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். அது போல நேற்று முன்தினம் இருவரும் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தியுள்ளனர்.

 

இவர்களில், முனியாண்டிக்கு தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், தச்சன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து லால்குடி அரசு மருத்துவமனைக்கு முனியாண்டி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

 

அவரது உடல்நிலை மோசடைந்த நிலையில் அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக, திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே முனியாண்டி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதேபோல, சிவக்குமாரும் மது அருந்திவிட்டு வீட்டில் வந்து படுத்து தூங்கி உள்ளார். மறுநாள் காலை எழுந்திருக்கவில்லை.

 

அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வாயில் நுரை தள்ளிய நிலையில் சிவக்குமார் இறந்து கிடந்துள்ளார். டாஸ்மாக் மதுகுடித்த இருவர் இறந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து, காணக் கிளியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் கோல்டன் சிங் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை காவல் நிலையத்திற்கு தனியாக ஐடி கொடுக்கப்படாததால் வழக்குப் பதிவு செய்யவில்லை.

 

இதனால், சிறுகனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், காணக்கிளிய நல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்க்து.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon