சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம்..!
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக்கில் வாங்கிய மதுவை குடித்த இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.
குத்தாலம் வட்டத்தில் உள்ள தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டறைத் தொழிலாளிகளான பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் நேற்று மாலை மது அருந்தியுள்ளனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இருவரையும், அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்து விட்டனர்.
டாஸ்மாக் மதுவை குடித்ததால் தான் இருவரும் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறிய நிலையில், அவர்கள் பயன்படுத்திய மதுபாட்டிலில் மீதமிருந்த மதுவை தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தினர். ஆய்வு முடிவுகள் அடிப்படையில் மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரிய வந்ததாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த இருவரின் உறவினர்களும், மங்கைநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற மயிலாடுதுறை கோட்டாட்சியர் உள்ளிட்டோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து அவர்களது உடல்களை உறவினர்கள் பெற்று கொண்டனர். எனினும், சயனைட் கலந்த மதுவே இருவரின் மரணத்திற்கு காரணம் என்பதை ஏற்க மறுப்பதாக பூராசாமியின் மகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் சயனைட் கலந்த மதுவை குடித்து தான் உயிரிழந்தனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் பழனி குருநாதனின் சகோதரர்கள் மனோகர், பாஸ்கர் உள்ளிட்ட நான்கு பேரை, சந்தேகத்தின் அடிப்படையில் பெரம்பூர் காவல் நிலையப் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
இந்நிலையில், பழனி குருநாதன் மற்றும் பூராசாமி ஆகியோரை மனோகர் மற்றும் பாஸ்கர் தான் கொலை செய்துள்ளதாகவும், அவர்கள் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கமளித்துள்ளார்.






