கர்நாடகாவில் கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்த இலவச பேருந்து திட்டம்..!
கர்நாடகத்தில் மகளிர் இலவசப் பேருந்து பயணத்திற்கான “சக்தி” திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா தொடங்கிவைத்தார். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், விதான் சவுதாவின் வெளியே நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சக்தி திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இந்த திட்டத்திற்கான அடையாள அட்டையையும் அவர்கள் அறிமுகப்படுத்தினர். கர்நாடக அரசாங்கம் கொண்டுவந்துள்ள சக்தி திட்டத்தில் கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட பெண்கள் மட்டுமே இலவசமாக பயணம் செய்ய இயலும். அதன்படி இலவசப் பேருந்து பயணம் செய்ய, பெண்கள் சக்தி கார்ட் என்ற அட்டையை பெற வேண்டும்.
கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதற்கான அடையாள அட்டை இருந்தால் மட்டுமே இந்த சக்தி அட்டை பெற முடியும். கர்நாடக மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் மற்றும் பெங்களூரு மாநகர பேருந்துகளில் இலவச பேருந்து என்ற ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணிக்க முடியும்.
ஸ்டிக்கர்கள் இல்லாத பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்தால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





