காதல் திருமணம் செய்த பெண்ணை வீடு புகுந்து கடத்திய கும்பல்..!
நெல்லையருகே காதல் திருமணம் செய்த பெண்ணை அந்த பெண் குடும்பத்தினர் வீடு புகுந்து கடத்தி சென்ற வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்த முருகன் என்பவர் சுமிதா என்ற பெண்ணை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் காதல் ஜோடிகளிடம் விசாரணை நடைபெற்றது.
அப்பொழுது இருவரும் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் சுமிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூடங்குளத்தில் உள்ள முருகன் வீட்டிற்குள் நுழைந்து முருகனைத் தாக்கி விட்டு சுமிதாவை கடத்தி சென்றனர்.
இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் தொடர்பாக பெண்ணின் தந்தை உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் எட்டு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நான்கு பேரை தேடி வருகின்றனர்.






