மண்ணை உண்டு உயிர்வாழ்ந்த 62 வயது மூதாட்டி..!
அரசு வேலையில் இருக்கும் இரண்டு மகன்களும் கைவிட்ட நிலையில் மண்ணை உண்டு உயிர் வாழ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை காவல் துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தஞ்சை காவிரி நகரில் 62 வயதான மூதாட்டி ஞானஜோதி வீட்டிலேயே அடைக்கப்பட்டிருந்ததோடு பட்டினியால் மண்ணை உண்ணும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மகன் சண்முகசுந்தரம் சென்னையில் காவல் ஆய்வாளராகவும் மற்றொரு மகன் வெங்கடேசன் பொதிகை தொலைக்காட்சியில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
தாயை பராமரிக்காமல் கைவிட்டு விட்டதாகவும் அந்த பகுதி மக்கள் கூறினர். 10 ஆண்டுகளாக மூதாட்டி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மகன்கள் இருவரும் வாரம் தோறும் பிஸ்கட்டுகளை வீசிவிட்டு செல்வதாகவும் அந்த பகுதி மக்கள் கூறினர்.
இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் மூதாட்டியை மீட்டு சிகிச்சை அளிக்கவும் இரண்டு மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த வீட்டின் பூட்டை உடைத்து மூதாட்டியை மீட்ட காவல்துறை அதிகாரிகள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.






