மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி 2வது திருமணம்..!
முதல் மனைவி இறந்து விட்டதாக கூறி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி பரிதாபம் காட்டி இரண்டாவது திருமணம் செய்த நபர் முதல் மனைவியிடம் வசமாக சிக்கி உள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் மோனிஷா.
இவருக்கும் சிவகங்கை மாவட்டம் கண்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் தனிமையில் இருந்த பாலகிருஷ்ணன் அடுத்த கல்யாணம் செய்ய திட்டம் தீட்டியுள்ளார். முதல் மனைவி இருந்தால் எப்படி திருமணம் நடக்கும் என யோசித்த அவர் உடனே தனது மனைவியின் போட்டோவை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டியுள்ளார்.
தன் மனைவி இறந்து விட்டதாக கண்ணீர் விட்டு கதறி உறவினர்களையும் நம்ப வைத்துள்ளார். மனைவியை இழந்து தவிக்கும் பாலகிருஷ்ணனுக்கு உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என விரும்பிய உறவினர்கள் உறவுக்காரப் பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இப்படியாக இரண்டாவது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த பாலகிருஷ்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் வந்தது பிரச்சினை. இறந்ததாக ஒட்டப்பட்ட போஸ்டர் சம்பந்தப்பட்ட முதல் மனைவி மோனிஷா கண்ணில் படவே கொதித்துப் போனார் அவர். உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டதாக கூறி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட கணவர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார்.





