ஊராட்சி தலைவர் பதவி 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
தர்மபுரி அருகே ஊராட்சி தலைவர் பதவி 24 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பென்னாகரம் ஒன்றியத்திலுள்ள பனைக்குளம் ஊராட்சியில் மொத்தம் 3,600 வாக்குகள் உள்ளன.
தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பனைக்குளம் ஊராட்சி தலைவர் பதவியை ஏலத்தில் விட கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் 5க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் திருமால்பாடி கிராமத்தை சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரான இமானுவேல் என்பவர் 24 லட்சம் ரூபாய்க்கு ஊராட்சி தலைவர் பதவியை ஏலத்துக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊர் மக்கள் அவரை தலைவராக ஏற்றுக் கொள்வதாகவும் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பனைக்குளம் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவி ஏலத்தில் விடப்பட்டது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே உள்ளாட்சி பதவி ஏலம் விடப்படுவதை தவிர்க்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இத்தகையை ஏலம் மக்கள் ஆட்சிக்கு எதிரான செயல் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.





