டிச.7ல் சென்னையில் ஆர்பாட்டம் – கிருஷ்ணசாமி அறிவிப்பு!
கமல்ஹாசன் நடித்துவரும் ‘சண்டியர்’ தலைப்பை மாற்ற கோரி வரும் டிசம்பர் 7-ம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கிருஷ்ணசாமி, “கமலஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு ‘சண்டியர்’ என பெயர் வைக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது என ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு அளித்தோம்.
அதேபோல தயாரிப்பாளர் சங்கத்திடம் இது குறித்து மனு அளித்தோம். அதன் பிறகு பத்து நாட்கள் படக்குழுவிற்கு அவகாசம் வழங்கினோம்.2004-ல் தடை செய்யப்பட்ட தலைப்பை ஏன் மீண்டும் வைக்கிறார்கள். இது தனிப்பட்ட முறையில் கிருஷ்ணசாமிக்கும், கமலஹாசனுக்கும் நடக்கும் பிரச்சனை இல்லை. தென்மாவட்டங்களில் நடக்கும் பிரச்சனை என்பதால் இதை பற்றி பேசுகிறோம். ‘சண்டியர்’ படத்தின் பெயரை மாற்றி படப்பிடிப்பு நடத்தலாம் என பத்து நாள் முன்பு கூறி இருந்தோம். ஆனாலும் நாங்கள் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டோம் என்பது போல் படக்குழுவினர் மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பிலே போஸ்டர் ஒட்டி உள்ளனர்.
கமல் படத்தில் வைக்கப்பட்ட சாதி காட்சிகளால் கடந்த காலங்களில் பல பிரச்சனைகள் நடந்துள்ளது. அதனால் தான் இந்த தலைப்பை மாற்ற சொல்கிறோம். எனவே இந்த சண்டியர் தலைப்பை மாற்ற கோரி வரும் டிசம்பர் 7-ம் தேதி புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் சென்னையில் ஆர்பாட்டம் நடத்த உள்ளோம். அன்றைய தினமே சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழுவிடம் இந்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என மனு அளிக்க உள்ளேன். ‘திரை உலகமே திரும்பி பார்’ என்ற கருத்தரங்கத்தையும் நடத்த உள்ளோம்.
டிசம்பர் 7-ம் தேதி காலை 11 மணிக்கு ஊர்வலமாக சென்று மனு அளிக்க உள்ளோம். எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து சாஸ்திரி பவன் வரை ஊர்வலமாக வந்து சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழு உறுப்பினர்கள் இடம் மனு அளிக்க உள்ளோம். அதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. காவல் துறை அனுமதி வழங்கிய பிறகு தான் எங்கே போராட்டம் நடைபெறும் என்பது உறுதி செய்யப்படும்” என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





