திருச்சி அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம்..!
திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தவறாக எச்.ஐ.வி (HIV) தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.40 லட்சமாக உயர்த்தி வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட ரத்தப் பரிசோதனையில் எச்.ஐ.வி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்த பிரசவ அறுவை சிகிச்சையின்போது ரத்தம் குறைவாக இருந்ததால், அரசு ரத்த வங்கி மூலமாக வேறு ஒருவரின் ரத்தம் அவருக்குச் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாய்க்கும் குழந்தைக்கும் மேற்கொள்ளப்பட்ட அடுத்தகட்ட மருத்துவப் பரிசோதனையில், இருவருக்கும் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட துறைசார் ஆய்வில், அறுவை சிகிச்சையின்போது அரசு ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்டு ஏற்றப்பட்ட ரத்தத்தில் தவறு நடந்திருப்பதும், எச்.ஐ.வி தொற்று உள்ள நபரிடமிருந்து பெறப்பட்ட ரத்தமே அப்பெண்ணுக்குச் செலுத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட தாய், தனக்கும் தனது குழந்தைக்கும் அரசு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரத்த தானம் செய்த நபரிடம் ரத்தம் பெறப்பட்ட சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் எச்.ஐ.வி தொற்று கண்டறியப்படவில்லை.
ரத்தத்தில் ‘விண்டோ பீரியட்’ (Window Period) காலகட்டத்தில் இருக்கும் தொற்றுகளைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான அறிவியல் முறைகளோ அல்லது கட்டமைப்புகளோ தற்போது இல்லை. இருப்பினும், இந்த ரத்தத்தால் மனுதாரரும் அவரது பச்சிளங்குழந்தையும் எச்.ஐ.வி தொற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது சுட்டிக்காட்டப்பட்டது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தரப்பின் துயரைக் கருத்தில் கொண்டு, இழப்பீட்டுத் தொகையைத் தாமாக முன்வந்து உயர்த்தி வழங்குவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பரதன் மற்றும் பார்த்தீபன் ஆகியோருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று, மனுதாரருக்கும் அவரது குழந்தைக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பின் இந்த ஒப்புதலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ.2.50 லட்சம்போக, மீதமுள்ள ரூ.37.50 லட்சத்தில் ரூ.17.50 லட்சத்தை 2 வாரங்களுக்குள்ளும், ரூ.20 லட்சத்தை 4 வாரங்களுக்குள்ளும் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் குழந்தைக்கும் கூடுதல் இழப்பீடு கிடைக்க அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அவருக்கு உதவிய வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்ட நீதிபதி, வழக்கினை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




