வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இ.பி.எஸ். கூட்டத்தில் ஆஜர்..!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் முகாமில் இருந்த இரண்டு முக்கிய எம்.எல்.ஏ-க்கள், நேற்று (புதன்கிழமை) இ.பி.எஸ். தலைமையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டங்களை வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பெரும்பாலும் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில், தற்போது இரு எம்.எல்.ஏ-க்கள் இக்கூட்டங்களில் பங்கேற்றிருப்பது அதிமுகவுக்குள் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மற்றும் திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன், சட்டமன்றத் தேர்தல் செயல்பாடு குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் எடப்பாடி பழனிசாமி நேற்று விரிவான ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.
இதில், ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ ஹரி பாஸ்கரும், திருவள்ளூரில் நடைபெற்ற கூட்டத்தில் திருத்தணி எம்.எல்.ஏ கே. ஹரியும் கலந்து கொண்டனர். இதற்கு முன்பு வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதப்பட்ட இவர்களின் வருகை, அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வேலுமணி – சி.வி. சண்முகம் அணியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் இப்போது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குத் தங்களது ஆதரவை நீட்டத் தொடங்கியுள்ளனர் என்பதையே இந்த எம்.எல்.ஏ-க்களின் பங்கேற்பு காட்டுவதாக கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் இதே போன்ற ஒரு மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில், வேலுமணி ஆதரவாளராகக் கருதப்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ மரகதம் வெற்றிவேல் பங்கேற்றிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மேலும் இரு எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் கலந்துகொண்டிருப்பது அவரது தலைமையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நேற்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு நிர்வாகிகள் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்கு உண்மையாக உழைக்கும் விசுவாசிகளுக்கு மட்டுமே பொறுப்புகளை வழங்க பரிந்துரைக்க வேண்டும்.
மேலும், சுயநலத்திற்காகக் கட்சியை விட்டுச் சென்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவதில் தொண்டர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தினார். ஈரோடு இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும், அங்கே அதிமுக நிச்சயம் வெற்றி பெற்று, அது தங்களின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளிடம் ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




