எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் அகற்றுவார்கள் – மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அக்கட்சியின் மகளிரணி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக செயல்படுவதாக கூறினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் ஆளும் கட்சியாக மாற இன்னும் வேகமாக சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றும் அதற்கான களமாக இந்த கூட்டம் இருக்கிறது.
தற்போதைய அரசை ஆறு மாதம் விமர்சனம் செய்யாமல் இருப்பேன் என்று ஏற்கனவே பேசினேன். ஆனால் இதை உடனே உண்மைக்கு மாறாக மாற்றி ஆட்சியை கவிழ்க்க சதியா என சிலர் அழ ஆரம்பித்துவிட்டனர். அதற்கு நான் மீண்டும் விளக்கம் அளிக்கிறேன். இந்த தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். ஆனால் பொறுப்பான எதிர்க்கட்சியாக திமுக இருக்கும் என்றும், அதேபோல் ஆட்சியின் தோல்விகளை சுட்டிக்காட்டுவோம் என்றும், இனி எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள் அதுபோல் தான் ஒரு நிலை இருப்பதாக தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த உடன் விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் என பல திட்டங்கள் கொண்டு வந்தோம். இந்த தேர்தலில் கூட 8,000 கூப்பன், உரிமைத் தொகை என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. மக்களுக்கான திட்டங்கள் என்பதால் அதனை பார்த்து பார்த்து செய்தோம் குறிப்பாக மகளிர்களுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் இன்று சமூக வலைதளத்தில் பார்த்தால் குற்றச்சம்பவங்கள், சென்னையில் மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை என ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம் என மக்கள் யோசிக்கும் சூழல் உருவாகிவிட்டதாக பேசினார். கொடூரமான குற்றசம்பவம் அதிகரித்து இருப்பதை தான் நியூஸ் தொலைக்காட்சியில் பார்க்கிறோம்.
தவெக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கும் என கூறினார்கள். ஆனால் இன்று தவெக ஆட்சியில் இருந்து தான் மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஷாப்பிங் செய்யும் நிலையில் விஜய் இருக்கிறார். அவர் ஆட்சியை காப்பாற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கேட்கிறார். அவரின் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லையா? என கேள்வி எழுப்பினார். தற்போது ஆதரவு அளித்த கட்சிகளும் யோசிக்கும் நிலை உள்ளது.
டெல்லியில் பாஜக செய்து வருவது போல் தமிழகத்தில் தவெக அரசு செய்து வருகிறது. தேர்தலில் ஓட்டு போட்ட போது கையில் வைத்த மை காயும் முன் அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து த.வெ.க வில் இணைவது ஏற்றுக் கொள்ள முடியுமா எனவும் ஜனநாயக சக்திகள் இதனை நியாயமாக கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




