--- --:--:-- --

6 வழியாக மாறப் போகும் முக்கிய சாலை..!

5

சென்னையின் மிகப் பிஸியான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான சர்தார் பட்டேல் சாலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலால் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களை இணைக்கும் இந்த முக்கிய சாலை, தினசரி லட்சக்கணக்கான பயணிகளைச் சுமந்து செல்கிறது.

 

குறிப்பாக ஐஐடி மெட்ராஸ், ராஜ்பவன் மற்றும் அண்ணா சாலை ஆகிய முக்கிய இடங்களை இணைக்கும் இந்த சாலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் வழக்கமாகவே இருந்து வருகிறது. இதை சமாளிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை ₹45 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்கத் திட்டத்தை விரைவில் அமல்படுத்தத் தயாராகியுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சாலையில் இரு கூடுதல் வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், பாதசாரிகளுக்கான நடைபாதைகள் புதுப்பிக்கப்பட்டு பாதுகாப்பானதாக மாற்றப்படுகின்றன.

 

குறிப்பாக மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் நடைபாதைகள் குறுகலாக இருப்பதால், மக்கள் சாலையிலேயே நடக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதைத் தவிர்க்க, நடைபாதைகள் அகலப்படுத்தப்படுவதுடன், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும், காந்தி மண்டபம் அருகே உள்ள நடைபாதைகள் மாதிரி அமைப்பில், மற்ற பகுதிகளிலும் வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஐஐடி மெட்ராஸ் முதல் ராஜ்பவன் வரையிலான சுமார் 1.70 கிலோமீட்டர் நீளப்பகுதி விரிவாக்கப்படும். அதன் பின்னர், இரண்டாம் கட்டமாக ராஜ்பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 கிலோமீட்டர் நீளப்பகுதி மேம்படுத்தப்படும். மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்கனவே கட்டப்பட்ட மேம்பாலத்தின் கீழ் சுமார் 400 மீட்டர் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த பகுதி போக்குவரத்து ஓட்டம் ஓரளவு சீராகியுள்ளது.

 

மேலும், அடையார் புற்றுநோய் நிறுவனம் சுற்றுப்பகுதியில் ஒலி மாசுபாட்டை குறைக்கும் வகையில் சவுண்ட் பாறியர் (ஒலி தடுப்புச் சுவர்) அமைக்கும் பணியும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் மற்றும் மருத்துவமனை சூழலில் அமைதியான சூழலை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இதற்கிடையில், கிண்டி – வேளச்சேரி வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முக்கிய முயற்சியாக, குருநானக் கல்லூரி சந்திப்பு அருகே ₹310 கோடி மதிப்பில் 3 கிலோமீட்டர் நீள மேம்பாலம் அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் வேளச்சேரி பிரதான சாலை பகுதியில் இருந்து தொடங்கி, ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி பகுதியைத் தாண்டி நீளவுள்ளது.

 

சென்னை மாநகராட்சி ஆய்வுகளின்படி, ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்பு மற்றும் குருநானக் கல்லூரி சந்திப்புகளில் ஒரு மணி நேரத்திற்கு 7,000க்கும் அதிகமான வாகனங்கள் பயணிப்பதாக பதிவாகியுள்ளது. தினசரி சுமார் 7 லட்சம் மக்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், சர்தார் பட்டேல் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதோடு, பயண நேரம் குறையும், எரிபொருள் வீணாகும் அளவு தடுக்கப்படும், மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சாலை பாதுகாப்பு மேம்பட்டு, பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon