இன்னல்களைப் போக்க மாநகரப் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கை..!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகள் காரணமாக கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சந்திக்கும் இன்னல்களைப் போக்க, மாநகரப் போக்குவரத்து கழகம் அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதன்படி, நாளை மறுநாள் (28.02.2026) முதல் தாம்பரம் மற்றும் பாரிமுனை இடையே 7 நிமிட இடைவெளியில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மிக முக்கியமாக, மின்சார ரயில் பாஸ் வைத்திருப்பவர்கள் இந்தப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை இணைக்கும் மிக முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில்கள் செயல்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான மக்கள் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் நடைமேடையில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் 204 ரயில் சேவைகள் 115 ரயில் சேவைகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பணிகள் முடிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளது. இருப்பினும், ரயில்கள் குறைக்கப்பட்டுள்ளதால், மின்சார ரயில்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் மின்சார ரயில் சேவை சிக்கல் காரணமாக மாநகர பேருந்துகளை பீக் ஹவர்ஸ் நேரங்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (28.02.2026) முதல் 20 மாநகர பேருந்துகள் தாம்பரத்திலிருந்து பாரிமுனை வரை 7 நிமிட இடைவெளியில் காலை 6:40 மணி முதல் 9.40 மணி வரை இயக்கப்பட உள்ளன.
அதேபோல், பாரி முனையில் இருந்து தாம்பரத்திற்கு 7 நிமிட இடைவெளியில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து சேவைகள் தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம், கிண்டி, எழிலகம், தலைமை செயலகம், பாரிமுனை வரை இயக்கப்படும் எனவும் ரயில்வே பாஸ் வைத்திருப்பவர்கள் இலவசமாக இந்த பேருந்தில் ஏறி பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




