பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மகன் திடீர் மரணம்..!

பிளாக் அண்ட் வொயிட் காலம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் சினிமா வரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி சாதனை படைத்துள்ள கானக் குயில் எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா மரணமடைந்த செய்தி, திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

தனது சிறப்பான குரல் வளத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் பாடி தென்னிந்திய ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவரது மகன் முரளி கிருஷ்ணா, ஜனவரி 22-ம் தேதி அதிகாலை மாரடைப்பால் காலமானார். இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த எஸ். ஜானகி, 50-களின் தொடக்கத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். 1938-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 20 வயதில் 1957-ம் ஆண்டு கொஞ்சும் சலங்கை என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். எம்.எஸ்.விஸ்வநாதன் இவரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடிகைகளுக்கு பின்னணி பாடகியாக மாறிய எஸ்.ஜானகி, தனது அபாரமான குரலால் இசை உலகை ஆட்சி செய்தார்.

 

1959-ம் ஆண்டு ராம்பிரசாத் என்பவருடன் ஜானகிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு முரளி கிருஷ்ணா ஒரே மகன் மட்டுமே இருந்தார். 1997-ம் ஆணடு ராம்பிரசாத் மரணமடைந்தார். இசைக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், முரளி கிருஷ்ணாவிற்கும் சிறுவயதிலிருந்தே கலை மீது ஆர்வம் இருந்தது. முரளி கிருஷ்ணா தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞரும் ஆவார். சென்னையைச் சேர்ந்த உமா என்ற நடனக் கலைஞரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்த அவர், தனது மகள்களின் திருமணத்தை முடித்துவிட்டு, கடந்த சில ஆண்டுகளாகத் தனது தாய் எஸ்.ஜானகியுடன் வசித்து வந்தார். இன்று (ஜனவரி 22) அதிகாலையில் முரளி கிருஷ்ணாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தத் தகவலை எஸ்.ஜானகி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

இளையராஜாவுடன் இணைந்து ஆயிரக்கணக்கான பாடல்கள், எஸ். பி. பாலசுப்பிரமணியத்துடன் மறக்க முடியாத டூயட்டுகள் என 4 தேசிய விருதுகளையும் 31 மாநில விருதுகளையும் வென்றவர் எஸ்.ஜானகி. இத்தனை புகழுக்கு மத்தியிலும் எளிமையின் அடையாளமாகத் திகழும் ஜானகிக்கு, திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவரது மகன் இறப்புக்கு தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.