ஜம்மு-காஷ்மீரில் கோர விபத்து..!

ம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் டோடா (Doda) மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடந்த பயங்கரமான சாலை விபத்தில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 10 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தச் சோகமான சம்பவத்தை யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா உறுதி செய்துள்ளார்.

 

டோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா (Bhaderwah) நகரத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கான்னி டாப் (Khanni Top) என்ற மலைப்பாங்கான பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பதர்வா-சம்பா (Bhaderwah-Chamba) மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் ராணுவத்தின் புல்லட் புரூப் வாகனம் (Casper vehicle) சென்று கொண்டிருந்தது.

 

இந்த வாகனத்தில் மொத்தம் 17 ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். அவர்கள் உயரமான பகுதியில் உள்ள ஒரு ராணுவ முகாமிற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குறுகிய வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த 200 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் தலைகுப்புற விழுந்தது.

விபத்து நடந்தவுடன் ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து அதிரடி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் விழுந்த வாகனம் அப்பளம் போல நொறுங்கியிருந்தது. முதற்கட்ட தகவலின்படி 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட மற்ற வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி மேலும் 6 வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

 

காயமடைந்த மற்ற 7 வீரர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் உதம்பூர் (Udhampur) ராணுவ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா தனது ‘X’ தளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில்,”டோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது 10 துணிச்சலான இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

 

வீரர்களின் தன்னிகரற்ற சேவையையும் உச்சக்கட்ட தியாகத்தையும் நாடு என்றும் நினைவில் கொள்ளும். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், காயமடைந்த வீரர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாவும் இந்த விபத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.