--- --:--:-- --

இன்று கரையை கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!

3

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இலங்கை அருகே கரையை கடக்க உள்ள நிலையில், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

 

இது, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை பொத்துவில் – திரிகோணமலை இடையே இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக, திருவாரூர், நாகை மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்யும் எனக் கூறியுள்ள வானிலை மையம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் மயிலாடுதுறையில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. நாளை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே நாளில், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon