எஸ்.ஐ.ஆர். படிவங்கள் திரும்பி வழங்காதவர்களுக்கான வாய்ப்பு..!

மிழ்நாட்டில் வாக்காளர் திருத்தப் படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரம் வாக்காளர்களுக்கு மட்டுமே S.I.R. படிவம் வழங்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 9 மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களிலும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

 

டிசம்பர் 4 ஆம் தேதி வரை பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 11ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்பி, திரும்ப அளிப்பதற்கு இன்றே கடைசி நாளாகும்.

 

நேற்றைய நிலவரப்படி 12 மாநிலங்களிலும் 99.98 சதவிகித படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, 99.59 சதவிகித படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்களில் 99.99% படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதாவது 4,201 பேருக்கு மட்டுமே படிவங்கள் வழங்கப்படவில்லை.

 

விநியோகிக்கப்பட்டதில் 99.95% படிவங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. அதாவது 26,967 பேர் மட்டுமே படிவங்களை திருப்பி அளிக்கவில்லை. இந்நிலையில், படிவங்களை திருப்பி அளிக்க மேலும், மூன்று நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 14ஆம் தேதி வரை படிவங்களை திருப்பி வழங்கலாம்.

 

எஸ்.ஐ.ஆர். படிவங்களை திருப்பி அளித்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் எஸ்.ஐ.ஆர். 2026 என்ற பகுதிக்குச் சென்று செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்களை அளித்து, தங்களது படிவம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என அறிந்து கொள்ளலாம்.