பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி வழங்கிய இண்டிகோ..!

ண்டிகோ விமான சேவை ஆறாவது நாளாக பாதிக்கப்பட்ட நிலையில், 610 கோடி ரூபாய் விமான கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானிகள் பற்றாக்குறை காரணமாக முடங்கிய இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை, படிப்படியாக சீராகி வருகிறது.

 

எனினும், ஆறாவது நாளாக நேற்றும் நாடு முழுவதும் 560 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். அதிகபட்சமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் 115 விமானங்களும், மும்பையில் 112 விமானங்களும், டெல்லியில் 109 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

 

சென்னையில் இருந்து புறப்படும் 50 விமானங்களும், சென்னைக்கு வரும் 50 விமானங்களும் என 100 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் 1ஆவது உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

 

 

சென்னையில் விமான சேவை சீராகாததால் பயணிகள் தவித்தனர். உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்துக்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள போதிலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக பயணிகள் குற்றம்சாட்டினர். கோவையில் இருந்து ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லக்கூடிய இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.

 

இந்நிலையில், மொத்தமுள்ள 2300 விமானங்களில், 1650 விமானங்கள் வரை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாளுக்குள் நிலைமையை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான கட்டணத்தை திருப்பி தர மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், பயணிகளுக்கு சுமார் 610 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே, இண்டிகோ விமான நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு அதன் தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் உள்ளிட்ட எட்டு அதிகாரிகளே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ள இண்டிகோ விமானிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், குளறுபடி தொடர்பாக இண்டிகோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளிப்பதற்கான கெடுவை இன்று மாலை 6 மணி வரை விமான போக்குவரத்து இயக்ககம் நீட்டித்துள்ளது.