காலம் காலமாக நாங்கள் ஏற்றும் தீபத்தை ஏற்றக்கூடாது என்று கூறுவது நியாயம் அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும்.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று காலை மலை உச்சியில் அதற்கான ஏற்பாடுகளை செய்த கோயில் நிர்வாகம் திடீரென ரத்து செய்தது.
மேலும் வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதன்படி, தீர்ப்பை வாசித்த நீதிபதி, “நேற்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு ஆணையை உடனடியாக பின்பற்றவும். அது தொடர்பான உத்தரவு நிறைவேற்றப்பட்ட நகலை நாளை காலை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.
அத்துடன் மதுரையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்ததுடன், மனுதாரர் தீபமேற்ற மதுரை மாநகர் காவல் ஆணையர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தார்.
தீர்ப்பை அடுத்து கோயில் விளக்கேற்ற சென்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “நீதிமன்றத்தால் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு. தமிழக அரசு தலை குனியாது தலை நிமிரும் என்று சொன்னார்கள். ஆனால் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று தமிழக அரசு தலை குனிந்துள்ளது. தமிழக அரசு மிக மிக கீழ்த்தரமான முறையில் நேற்று நடந்தது.
தமிழக மக்களுக்கு இன்று நீதி கிடைத்துள்ளது. 2026 தேர்தலில் தமிழ்நாடு முழுக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். சு. வெங்கடேசன் மட்டுமல்ல யாரெல்லாம் நீதிபதிகளை தவறாக பேசினார்களோ அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை தமிழக அரசு எடுக்க வேண்டும். தேவையற்ற பதற்றத்தை உருவாக்கியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் தான். திருமாவளவன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு நீதிபதியை எவ்வாறு குறை சொல்ல முடியும்? நீதிபதியை நீங்கள் குறை சொன்னால் விட்டுவிடுவார்களா? இங்கு சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் கிடையாது, சமூக நல்லிணக்கத்திற்கும் எந்த பாதிப்பும் கிடையாது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேவையில்லாத பிரச்சனையை உருவாக்குகின்றார் என என்னிடம் என் இஸ்லாமிய நண்பர்கள் கூறி வேதனைப்பட்டார்கள். திருமாவளவன் பேசுவது நியாயம் அல்ல. காலம் காலமாக நாங்கள் ஏற்றும் தீபத்தை ஏற்றக்கூடாது என்று கூறுவது நியாயம் அல்ல. தீபம் ஏற்றுவதால் யாருக்கு பாதிப்பு உள்ளது?” என்று தெரிவித்தார்.






