மேடைதோறும் திராவிட மாடல் பற்றி ஏன் பேசுகிறேன் – முதல்வர் ஸ்டாலின்
அதிமுகவும், பாஜகவும் தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய நினைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடைபெற்ற திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, அதிமுக மற்றும் பாஜகவை சரமாரியாக சாடிய முதலமைச்சர், தமிழ் – தமிழர்கள் என்றாலே சிலருக்குப் பிடிக்காது என்றும், தமிழர்கள் தலைநிமிரக் காரணமான சமூகநீதி திட்டங்களை சிலர் பறிக்க முயற்சிப்பதாகவும் விமர்சித்தார்.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பை நம்மால் உடைக்க முடியுமா என சிலர் சவால் விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அந்தக் கட்டமைப்பை உடைப்பதற்கான விதைகள் மட்டுமே ஊன்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழர்களின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்க முயற்சிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தும் காவல் அரணே திராவிட மாடல் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். திராவிட மாடல் என்று சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. அதனால் தான் தொடர்ந்து அவர்களுக்கு எரியட்டும் என்று திராவிட மாடல் என்று சொல்கிறோம் என்று மேடைதோறும் தாம் திராவிட மாடல் பற்றி ஏன் பேசுகிறேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுயமரியாதைக்கு எதிரான சூழ்ச்சி நடப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். திராவிட தலைவர்கள் வழிவந்த தம்மைப் பற்றி திட்டமிட்டு பொய்கள் பரப்பப்படுவதாகவும், வழக்கம் போல் அனைத்துக்கும் தமது செயல்களால் பதிலடி கொடுப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
2026இல் திராவிட மாடலின் 2.O ஆட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்த முதலமைச்சர், வரும் தேர்தல் தமிழினம் தற்காத்துக்கொள்ளுவதற்கான சமுதாயத் தேர்தல் எனக் கூறினார். தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய காத்திருப்பவர்களை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும் எனவும் முதலமைச்சர் சூளுரைத்துள்ளார்.
திராவிடர் கழகத்தின் நீட்சியே திமுக எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிப் பெயர்களின் இறுதி எழுத்து ‘ர்’ என முடியும் வகையில் மாற்றம் செய்து, மக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கச் செய்ய வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். கொள்கை தெளிவும், போராட்டக்குணமும், ஒற்றுமை உணர்வும் உள்ள மதச்சார்பற்ற கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




