சென்னையில் அதிகாலை முதல் மழை..!
தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், அவ்வப்போவது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னையில் அதிகாலை 5 மணி முதலே பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்த நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வடபழனி, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகாலை முதலே காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




