வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

ங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் இன்று மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

 

புதுவையில் லேசான மழை பதிவாகியுள்ளது. தென் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நேற்று (02.09.2025) வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று (03.09.2025) காலை 05:30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி, காலை 08:30 மணி அளவில், வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

 

இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (03.09.2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 

04.09.2025 மற்றும் 05.09.2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06.09.2025 மற்றும் 07.09.2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

08.09.2025 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09.09.2025 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் அதிகபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்தவரை இன்று 03.09.2025 முதல் 05.09.2025 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும்.

 

மேலும் இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடை பொறுத்தவரை இன்று 03.09.2025 முதல் 05.09.2025 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (03.09.2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.