இரவு 7 மணிவரை தமிழ்நாட்டில் வெளுக்கப்போகும் மழை..!
தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிவரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஞாயிற்றுக் கிழமையன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. வடதமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென்தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
ஓரிரு இடங்களில், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. தென்தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், வட கடலோரப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. பெசன்ட் நகர், அடையாறு, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தி.நகர், தேனாம்பேட்டை பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு 7 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




