--- --:--:-- --

எம்.எல்.ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை மீது வழக்குப்பதிவு..!

3

சென்னையில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதி வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில் உள்ள துரைராஜ் நகரில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் இல்லத்தில் அதிகாலை 6 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

மேலும், அமைச்சர் பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதே போன்று, திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் திண்டுக்கல் மாவட்டம் கோவிந்தாபுரத்தில், வள்ளலார் நகரில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அமைச்சருக்கு சொந்தமான பட்டிவீரன்பட்டியில் உள்ள இருளப்பன் மற்றும் கெய்னி நூற்பாலையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

10 வாகனங்களில் 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய 30 மத்திய பாதுகாப்பு படையினருடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான எம்.எல்.ஏ., ஐ.பி.செந்தில் குமார் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறும் வேளையில், எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.

 

இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை மீது சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon