--- --:--:-- --

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

2

தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலையில் திடீரென மழை பெய்தது. சேந்தமங்கலம், வடபாதிமங்கலம், மாங்குடி, புலிவலம், விளமல் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

 

நாகை மாவட்டத்தில் திருமருகல், நாகூர், கீழ்வேளூர், வேளாங்கண்ணி, தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது.

 

தொடர் மழையால் நியூடவுன் புறவழிச்சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஈரோடு மாநகருக்குட்பட்ட சூளை, திண்டல், வீரப்பன்சத்திரம் போன்ற பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
இதற்கிடையே, சென்னை, கோவை, நீலகிரி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் கோவை, தேனி, தென்காசி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் போது 50 கிலோமீட்டர் வேகம் வரை சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon