காலை முதல் நடந்த அமலாக்கத்துறை சோதனை..!
டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதத்தின் துவக்கத்தில், சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனை முடிந்து சில நாள்கள் கழித்து இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை, “மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன.
சோதனையில் கணக்கில் வராத ரூ. 1,000 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.” “பார் உரிம டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுபான ஆலைகள் – டாஸ்மாக் அதிகாரிகள் இடையே நேரடி தொடர்பு இருந்துள்ளது. டிஸ்டில்லரிகள் மற்றும் பாட்டிலிங் நிறுவன சோதனையில் நிதி மோசடி தெரியவந்துள்ளது” எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (மே 16ஆம் தேதி) சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது, அவரது வீட்டின் அருகே கிழிந்த நிலையில் இருந்த வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட் நகல்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.அதேபோல், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனின் மகனிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், விசாகனை அமலாக்கத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




