வங்கதேசத்தில் இந்து தலைவர் கொலை.. இந்தியா கடும் கண்டனம்..!
வங்கதேசத்தில் இந்துத் தலைவர் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு, இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நாட்டில் உள்ள அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் “தன் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்” என்று இந்தியா வலியுறுத்தியது.
இந்து சிறுபான்மை தலைவர் பாபேஷ் சந்திர ராய் கொல்லப்பட்டதை, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் “இந்து சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்தும் செயல்” என வெளியுறவு அமைச்சகம் கூறியது. இது தொடர்பான அறிக்கையை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ளார்.
அதில், “வங்கதேசத்தில் இந்து சிறுபான்மைத் தலைவர் ஸ்ரீ பாபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. இடைக்கால அரசாங்கத்தின் கீழ் இந்து சிறுபான்மையினரை திட்டமிட்டு துன்புறுத்தும் முறையை நாங்கள் கண்டிக்கிறோம். முந்தைய இதுபோன்ற நிகழ்வுகளில் குற்றவாளிகள் தடையின்றி சுற்றித் திரிந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம், மேலும் இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் வேறுபாடுகளை உருவாக்காமல் பாதுகாக்கும் பொறுப்பை இடைக்கால அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் நினைவூட்டுகிறோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




