புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 12-வது நாள் அலுவல் கூட்டம் இன்று சட்டபேரவை தலைவர் செல்வம் திருக்குறள் வாசிக்க தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் உறுப்பினர்களின் வினா விடைகள், நிதிநிலை அறிக்கை மானிய கோரிக்கைகள் மீதான விவாதமும், அனைத்து துறை அமைச்சர்களின் மானிய கோரிக்கைகள் குறித்தான பதில் உரைகளும் இடம்பெற்றன.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது துறைகள் தொடர்பாக பதிலளித்து பேசியதாவது: பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும். இந்தாண்டு தலைமை காவல்துறை அலுவலகம் புனரமைக்கப்படும். புதுச்சேரி காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
போலீசாருக்கு சைபர் குற்றம் குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்றார்.நீட் பயிற்சி பெற 585 மாணவர்கள் விண்ணப்பத்துள்ள நிலையில், புதுச்சேரி நகரப்பகுதியில் 2, கிராமப்புறங்களில் 2 மற்றும் காரைக்காலில் 1-நீட் பயிற்சி மையம் அரசு சார்பில் தொடங்கப்படும். அரசுப் பள்ளிகளை ஒருங்கிணைத்து, மாணவர்கள் கல்வி திறன், ஆசிரியர்கள் திறன் அதிகரிக்கப்படும்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் மாலை நேரங்களில் சிற்றுண்டி திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 திட்டம் விரிவு படுத்தப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் முழுமையாக அரசே செலுத்தி வருகின்றது. புதுவை பல்கலைக் கழகம் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் இயக்கப்படும் என்றார்.