ஸ்டேட்டஸுக்கு தாடி பாலாஜி சொன்ன விளக்கம்!
தவெக கட்சி பொறுப்பு வழங்கப்படாததற்கு சமீபத்தில் தான் வெளியிட்ட மீம் பதிவு தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் தாடி பாலாஜி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருந்தார். அரசியலில் ஈடுபட ஆர்வம் உள்ளதாக அறிவித்து சில பல நற்பணிகளை செய்து வந்த தாடி பாலாஜி சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் தவெகவில் ஐக்கியமாகினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். விஜயின் அரசியலை விமர்சிப்பவர்களையும் தாடி பாலாஜி கண்டித்தார். விஜய் அழைப்பின் பேரில் தவெகவில் இணைந்ததாக சொன்ன தாடி பாலாஜி, அதன் முதல் மாநாட்டு வேலைகளிலும் ஈடுபட்டது, பொதுச் செயலாளர் என்.ஆனந்தை சந்திப்பது என பிஸியாக இருந்து வந்தார்.
சமீபத்தில் விஜயின் உருவத்தை டாட்டூவாக தனது நெஞ்சில் குத்தி அதனை பாலாஜி வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவுடன் ‘டாட்டூ குத்தியபோது 7 மணி நேரம் வலியைத் தாங்கிட்டிருந்தேன்’ என்று தாடி பாலாஜி சொன்னது வைரலானது. இதற்கிடையே தான் தவெக தொடங்கிய இரண்டாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு புதிய பொறுப்பாளர்களை விஜய் அறிவித்தார்.
அதன்படி, ஆதவ் அர்ஜுனா, ராஜ் மோகன் போன்றோருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டன. இதில் தாடி பாலாஜிக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பொறுப்பும் வழங்கவில்லை. இதையடுத்து, தாடி பாலாஜி தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் ஆதவ் அர்ஜுனாவை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வரவேற்கும் வீடியோவையும், தான் விஜய் உருவத்தை நெஞ்சில் டாட்டூவாக குத்திய வீடியோவையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “அவளோ புது பாய் பிரண்டோடு ஹேப்பியா இருக்கா.. தற்குறி நானோ அவளின் நினைவோடு” என்றும் மீமாக பதிவிட்டுடார். இந்தப் பதிவு, விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து விவாதமாக மாறிய இந்த விவகாரத்தில், தற்போது தாடி பாலாஜி விளக்கமளித்துள்ளார்.
தைப்பூச நாளான நேற்று தாடி பாலாஜி வெளியிட்ட வீடியோவில், “கடந்த சில நாட்களாகவே என்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றிய விஷயத்தை தான் எல்லோரும் பேசுகின்றனர். அது யாரோ ஒருவர் எனக்கு அனுப்பியது. அதனை எதேச்சையாக எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்தது இவ்வளவு பெரிய விவாதமாகும் என எனக்கு தெரியாது. எனது நண்பரும், த.வெ.க தலைவருமான விஜய் கட்சி தொடங்கும்போது, ‘விஜயின் நண்பனாக நான் பணியாற்றுகிறேன். அவர் நல்லபடியாக வர வேண்டும். கட்சி நல்லபடியாக வளர வேண்டும்’ என்றேன்.
பதவியையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நான் வேலை செய்யவில்லை. தைப்பூச திருநாளன்று ஓப்பனாக சொல்கிறேன். யாருக்கு புரியவில்லை என்றாலும் நான் கும்பிடும் கடவுளுக்கும் எனது நண்பர் விஜய்க்கும் புரியும். ஏனெனில், விஜய் யாருடைய பேச்சையும் கேட்டு அதை ஆலோசிக்க மாட்டார். அவரே ஒரு முடிவு எடுக்கக் கூடியவர். அம்முடிவு சரியாக இருக்கும். அதனால்தான் விஜய் இன்று அரசியலில் பயணம் செய்கிறார்.எனக்கு என்ன கொடுக்க வேண்டும். எதை கொடுத்தால் நான் இன்னும் வேகமாக ஓடுவேன் என்பது விஜய்க்கு தெரியும். தைப்பூச நாளில் கூறுகிறேன், விரைவில் எனது நண்பர் விஜயிடம் இருந்து எனக்கு அழைப்பு வரும். அதன்பின் எனது ஓட்டம் வேறுவிதமாக இருக்கும்.
இப்போதும் சொல்கிறேன், நான் பதவிக்காக வேலை செய்யவில்லை. மார்ச் மாதம் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார் விஜய். அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள். சுற்றுப்பயணம் விஜய்க்கு பெரிய மாற்றத்தை கொடுக்கும். விஜயின் கட்சியில் தொண்டனாக பணியாற்றுவதில் சந்தோசம். தொண்டனாகவே இருந்தாலும் சந்தோசம். எனது தலைவருக்காக தொடர்ந்து பணியாற்றி கொண்டே இருப்பேன்” என்று தாடி பாலாஜி விளக்கமளித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




