--- --:--:-- --

அம்மாபாளையம் நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா..!

3

அப்துல் கலாம் குணாதிசயங்கள் கொண்ட மாணவர்களை ஆசிரியர்கள் வெளிக்கொணர வேண்டும்.கே.ஜி. மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. பக்தவச்சலம் அறிவுரை..!

 

திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவுச்சுடர் கலையரங்கம் திறப்பு விழா, பள்ளி ஆண்டு விழா மற்றும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய தொகுப்பான ஆண்டு விழா மலர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

 

விழாவிற்கு திருப்பூர் (தொடக்க கல்வி) மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி தலைமை தாங்கினார்.அவிநாசி வட்டார கல்வி அலுவலர்கள் சுமதி, (II) திருநாவுக்கரசு (III), திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஈஸ்வரி, துணைத் தலைவர் விஜயலட்சுமி, 27 வது வார்டு கவுன்சிலர் வளர்மதி, 25 வது வார்டு கவுன்சிலர் பாரதி, ஊர் கவுண்டர் ஜெயக்குமார், நாட்டாமைக்காரர் கருப்புசாமி, புள்ளிக்காரர் சுரேஷ், முன்னாள் தலைவர் கோபால், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியை ஆனந்தி ஆண்டறிக்கை வாசித்தார். கோவை கே.ஜி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்தவச்சலம் அறிவுச்சுடர் கலையரங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது : ஆசிரியர்கள் உங்களை உருவாக்கும் தெய்வங்கள். ஆசிரியர்கள் சொன்னபடி கேட்டால் வாழ்க்கையில் உயர்வுக்கு வரலாம்.

 

இல்லையென்றால் 5-வது, 10வது தான் படிக்க முடியும். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் இடைவிடாது முயற்சிக்க வேண்டும். பெரியவர்களிடம் சகவாசம் வைத்துக் கொண்டு, அவர்களை மதித்து, அவர்களின் அறிவுரை கேட்டு நடக்க வேண்டும். சினிமா, டி.வி, செல்போன் பார்த்தால் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. எனக்கு பொய் சொல்ல தெரியாது. உண்மைதான் பேசுவேன். அதனால் தான் இந்த நிலைக்கு நான் வந்துள்ளேன்.

 

மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து அவர்களை மேன்மை நிலைக்கு கொண்டு வர பிறந்தவர்கள் தான் ஆசிரியர்கள் . காந்தி உண்மை பேச வேண்டும் என்றார். மனைவியை மதிக்க வேண்டும் என்றார். புலால் உண்ணுவதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னார். ஆனால், நாம் புலால் உண்ணுவதை பார்த்து செத்துப் போனவற்றை புதைக்க உன் வயிறு என்ன சுடுகாடா? என்று கேட்டார். உண்ணாவிரதம் இருக்க சொன்னார்.

 

மஹாத்மா நாட்டிற்காக தன் உயிரையே கொடுத்தார். அன்னை தெரசா ஏழைகளுக்காகவும், நோயாளிகளுக்காகவும் தன் வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டார். அப்துல் கலாம் நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்து 4 கோடி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தார். மற்றவர்களுக்காக வாழ்வதே வாழ்க்கை. அறிவு உள்ளவன் தான் மனிதன். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்கார்ந்து உள்ளீர்கள். இவர்களில் நான்கு பேர் அப்துல் கலாம் போல் உயர்ந்த பதவிக்கு வரலாம். அதனால், ஆசிரியர்கள் அப்துல் கலாம் போன்ற குணாதிசியத்தை இம்மாணவர்களிடம் கண்டுபிடித்து வெளிக்கொணர வேண்டும்.

 

இவ்வாறு அவர் பேசினார். இதனைதொடர்ந்து திருமுருகநாதசுவாமி திருமடம், உலக திருக்குறள் பேரவை தலைவர் சுந்தரராச அடிகளார் திருவள்ளுவர் திருவுருவ கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து தமிழகத்தின் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் விருது பெற்ற ஓடந்துரை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம் திருக்குறள் கல்வெட்டை திறந்து வைத்தார்.

 

அவிநாசி அறிவுச்சுடர் அறக்கட்டளை நிறுவனர் முத்துக்குமரன் ஏற்புரை வழங்கினார். பின்னர், பள்ளி மாணவர்களின் படைப்புகள் அடங்கிய ஆண்டு விழா மலரை மாவட்ட கல்வி அலுவலர் கோ.பழனி வழங்க அதனை திருமுருகன்பூண்டி நகராட்சி தலைவர் குமார் மற்றும் வட்டார கல்வி அலுவலர் சுமதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

விளையாட்டு, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் முன்னாள் மாணவர் பேரவை (2024-25) தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தேவராஜ், செயலாளர் சக்திவேல், பொருளாளர் பூபதி, துணைச் செயலாளர் விசுவநாதன் மற்றும் முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் கணேஷ், மூர்த்தி, பாலசுப்ரமணியம், ராமலிங்கம், வெங்கடாசலம், மாரிமுத்து, காமராஜர், ராசு (எ) பழனிசாமி, செந்தில் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கரசேதுபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம், பரதம், நாட்டுப்புறப் பாடல், வில்லுப்பாட்டு, செல்போனிலால் ஏற்படும் தீமைகள் குறித்த நாடகம், பாட்டு உள்பட பல்வேறு கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் இடைநிலை ஆசிரியை ஹெலன்செல்வி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிகளை பள்ளி ஆசிரியர்கள் முத்துக்குமார், சக்திவேல், சுரேஷ்குமார், சிவநடராஜபிரபு ஆகியோர் தொகுத்து வழங்கினார்.

 

அதேபோல் கலைநிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை உதவி தலைமை ஆசிரியை கவிதா, லலிதா, நித்யலட்சுமி, நித்யா, சுமதி உள்பட பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளும் மற்றும் நடன ஆசிரியர் பாபு ஆகியோர் செய்து இருந்தனர். விழாவில் பள்ளி மாணவ மாணவிகள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon