--- --:--:-- --

சென்னை திரும்பும் மக்கள் வசதிக்காக மாற்று ஏற்பாடு..!

10

பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை கட்டுப்படுத்த வரும் 20 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காவல்துறையினர் மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதன்படி வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் கனரக வாகனங்கள் பரணூர் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றி அனுப்பப்படுகிறது.

 

கனரக வாகனங்கள் இல்லாத சாதாரண வாகனங்கள் சிங்கபெருமாள் கோயில் ஒரகடம் சந்திப்பில் திருப்பி, ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லவும் திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் டாக்டர் அம்பேத்கர் சிலையில் இருந்து திரும்பி செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

ஜிஎஸ்டி சாலை, பழையமகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக கனரக வாகனங்கள் இன்று மதியம் 2 மணி முதல் வரும் 20 ஆம் தேதி மதியம் 2 மணி வரை அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்பட இருக்கிறது.

 

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக பூந்தமல்லி மற்றும் மதுரவாயல் நோக்கி திருப்பி விடப்படுகிறது. சென்னை நகருக்குள் மக்கள் பாதுகாப்பாகவும் சிரமம் இன்றி திரும்புவதையும் உறுதி செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்றும் தாம்பரம் போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

இதனிடையே பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு பொதுமக்கள் சென்னை திரும்புவதால் பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் இரணியம்மன் கோயில் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தென் மாவட்டங்களில் இருந்து திரும்பும் வாகனங்களால் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

4 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதேபோல செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியிலும் வாகனங்கள் வருகை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வாகனமும் 10 நிமிடங்கள் வரை காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon