பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு..!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் 4 வயது சிறுமி லியா லட்சுமி எல்கேஜி படித்து வந்தார். இந்நிலையில், மதியம் 2 மணி அளவில் கழிவறை சென்றுள்ளார். கழிவறை சென்று திரும்பிய போது அருகே இருந்த கழிவு நீர் தொட்டியில் சிறுமி லியா லட்சுமி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. குழந்தையின் உடல் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கழிவு நீர் தொட்டியின் மீது அமைக்கப்பட்டு இருந்த தகர ஷீட் சிதிலமடைந்து இருந்ததாகவும், அதன் மீது சிறுமி ஏறி நின்ற போது எடை தாங்காமல் உடைந்து உள்ளே விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து பள்ளியின் முன் பெற்றோர் முற்றுகையிட்டனர். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் முறையாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




