இன்று பள்ளி, கல்லூரி விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப் புகழ்பெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
இந்த திருவிழா சமயங்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வருவார்கள்.திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானது.
இந்நிலையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நவம்பர் 2ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.கந்த சஷ்டியின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.7) திருச்செந்தூர் கடற்கரையில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த சூரசம்ஹாரத்தைப் பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதனால் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




