நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 கோடி வரை மோசடி..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நான்கு கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மல்லக்குண்டா பகுதியை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் ஜோலார்பேட்டை வாணியம்பாடி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் வேலை இல்லாத நபர்களை குறி வைத்து இத்தகைய மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

 

போலி ஆவணங்களை காண்பித்து 60-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தலா 7 லட்சம் ரூபாய் வரையில் பணம் பறித்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதீப் குமாரின் வீட்டை முற்றுகையிட்டு அவர்களுடன் வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்த நிலையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.