பிரியாணியில் மண் விழுந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு..!
கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருணாகபுரி விநாயகர் கோவில் அருகில், கோல்டன் நகர் பகுதியில் வசித்து வந்த சதீஷ்குமார் (30) என்பவர் அவரது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பிரியாணியில் மண் விழுந்தது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஐந்து பேர் சேர்ந்து சதீஷ்குமாரை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1. சக்தி சண்முகம் (21), பாண்டியராஜன் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் சு.லட்சுமி ஆணையிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிரிகளான சக்தி சண்முகம் (21) மற்றும் பாண்டியராஜன் (27) ஆகிய இருவரையும் ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க இன்று ஆணை வழங்கப்பட்டது.
திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 65 நபர்கள் 2024-ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




