இளைஞரை திருமணம் செய்து பண மோசடி செய்த பெண் கைது..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இளைஞரை திருமணம் செய்து பணமோசடி செய்த பெண் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாராபுரத்தை சேர்ந்த 29 வயதான இளைஞர் ஒருவருக்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த சத்யா என்பவர் ஒரு செயலி மூலம் அறிமுகமாகியுள்ளார்.

 

தொடர்ந்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மாதம் தொப்பம்பட்டியில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்க்கு பிறகு பல ஆண்களுடன் சத்யா நெருக்கமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே வீட்டிலிருந்து சத்யா திடீரென மாயமாகியுள்ளார்.

 

12 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டு அவர் தப்பிக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட இளைஞர் புகார் அளித்துள்ளார், இதன் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காணாமல் போன சத்யாவை தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.