தமிழ்நாட்டில் தாமரை மலர வாய்ப்பே கிடையாது – முதல்வர்
பரப்புரைக்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவுக்கு அமோக வரவேற்பு இருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளாக பல நண்மைகளையும், பல சாதனைகளையும் செய்திருப்பதால் மக்கள் தங்கள் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிச்சயம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ள முதலமைச்சர், 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஆரம்பத்தில் பிரதமர் கூறிய நிலையில், போகப் போக பிரதமரின் வாயில் இருந்து அந்த வார்த்தை வரவே இல்லை என்று தெரிவித்தார்.
பிரதமருக்கே அச்சம் வந்துவிட்டதாக கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களை வாங்க பிரதமர் முயற்சி செய்வதாக கூறினார். ஆனால் அது நடக்காது என்ற முதலமைச்சர், தோல்வி பயம் வந்துவிட்டதால்தான் மீண்டும் மீண்டும் பாஜகவினர் தமிழ்நாட்டு பக்கம் வருவதாகவும் விமர்சித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக கால் பதிக்க வேண்டும் என்பது நடக்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட முதல்வர், நிச்சயமாக தமிழ்நாட்டில் தாமரை மலர வாய்ப்பே கிடையாது என்றார். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக, கச்சத்தீவு விவகாரத்தில் எந்த முயற்சியும் எடுக்காமல் மக்களை திசை திருப்பவே கச்சத்தீவு விவகாரத்தை பேசுவதாகவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.
குடும்ப அரசியல் கட்சி மற்றும் ஊழல் கட்சி தங்களை பிரதமர் கூறுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் நன்கொடை பத்திரங்கள், பி.எம்.கேர்ஸ் நிதி உள்ளிட்டவற்றிற்கு எந்த கணக்கும் இல்லை என்று குறிப்பிட்டார். இவற்றை எல்லாம் மறைக்கவே பல ஆண்டுகளாக தங்களை பிரதமர் விமர்சிப்பதாகவும் கூறினார்.
பாஜகவில் சேர்ந்துவிட்டால் அவர்கள் கறை படியாதவர்களாக மாற்றும் பணியை வாஷிங் மிஷின் போல செய்வதாகவும் பாஜகவை முதலமைச்சர் சாடியுள்ளார். ஜனநாயகத்தை காப்பதற்காகவே இந்தியா கூட்டணி அமைந்திருப்பதாக கூறிய முதல்வர், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு முறை என அனைத்திலும் ஒரே… ஒரே… என்று கூறி, ஒரே அடியாக இந்தியாவை அழிக்க திட்டம் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற அவர், தப்பித்தவறி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் தேர்தல் முறையே இருக்காது என்றும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




