--- --:--:-- --

கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்த போலீஸார்..!

3

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய இவர், இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சட்டம் ஒரு இருட்டறை, வைதேகி காத்திருந்தாள், கேப்டன் பிரபாகரன் உட்பட 150-க்கு மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுவரை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

 

நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்தில் அவரது உடலுக்கு நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினார். அவருடன் மாநில அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.

 

தற்போது, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இறுதிச்சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், தேமுதிக கட்சி அலுவலகம் அமைந்துள்ள கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு 100 அடி சாலையை தவிர்த்து விட்டு, பாடி பாலம், திருவீதி அம்மன் சர்வீஸ் சாலை, சாந்தி காலனி 13 வது பிரதான சாலையில் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon