நிர்மலா சீதாராமனின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை – உதயநிதி
தமிழகத்துக்கான மத்திய அரசின் வெள்ள நிவாரண தொகை பற்றி அமைச்சர் உதயநிதி அண்மையில் பேசிய கருத்து சர்ச்சை ஆனது. அதனையடுத்து அதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்கள் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம்.
அப்பன் வீடு… ஆத்தா வா.. போன்ற பேச்சுகள், அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல என காட்டமாக தெரிவித்திருந்தார்.இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் தற்போது பதிலளித்துள்ளார்.
எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், யாரிடம் எப்படி பேச வேண்டும் என பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கருணாநிதியைப் போல சிலரிடம் ஸ்டாலினைப் போல பேசுவதாகவும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில்தான் பேசியாக வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மரியாதைக்குரிய அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம் என தெரிவித்துள்ள அவர், வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தந்ததுபோல அடித்துப் பேச வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் மரியாதை தருவதற்கு தயாராகவே இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறை வைத்து நிதியைத் தாருங்கள்” எனவும் தனது பதிவில் அவர் கேட்டுகொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




