--- --:--:-- --

உடைகிறதா ADMK? BJP உடன் MLA-க்கள் நெருக்கம்…அரசியல் அரங்கில் புது திருப்பம்!

11

கூட்டணியை முறித்துக் கொண்ட எடப்பாடியை அரசியல் ரீதியாக பலவீனமாக்க பாஜக வியூகம் வகுப்பதாகக் கூறப்படும் நிலையில், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சிலர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியிருப்பது, தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா பாணியில் தமிழகத்தில் அதிமுகவை பிளவுபடுத்தும் திட்டமாக இது இருக்குமோ என்ற பேச்சும் எழுந்துள்ளன.

 

 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழக அரசியல் களத்தில் இப்போதே தேர்தல் ஜுரத்திற்கான அறிகுறிகள் தென்படுபடுகின்றன. ஆளும் திமுக தனது செல்வாக்கினை நிரூபிக்க வேண்டிய கட்டாயட்தில் உள்ளது. அதனால், மண்டலம் வாரிய பூத் ஏஜெண்டுகள் கூட்டத்தை நடத்தி வருகிறார் மு.க. ஸ்டாலின். இதுதவிர, திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “தேர்தலில் வெற்றி பெறாத தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், அவர்கள் கட்சியில் மூத்த உறுப்பினர்களாக இருந்தாலும் மாற்றப்படுவார்கள்” என்று கடுமையாக எச்சரித்தார். திமுக தரப்பில் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டனர்.

 

இதற்கு மாறாக, எதிர்முகாமில் உள்ள அதிமுக – பாஜக இடையே கூட்டணி முறிந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணா குறித்து தொடர்ந்து அவதூறு பேசியதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அதிமுக அறிவித்தது.

 

இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதில் அதிமுக திட்டவட்டமாக இருக்கிறது. சேலத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உங்கள் விருப்படி அதிமுக நடந்து கொண்டது; இஸ்லாமியர்களுக்கு அதிமுக பாதுகாப்பு அரணாக இருக்கும். 2 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே பாஜகவுடனான கூட்டணியை முறித்து கொண்டோம் என்றார்.

 

 

இந்த சூழலில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டெல்லிக்கு சென்று கட்சியின் முக்கியத் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். அவரிடம், `வேகத்தை காட்டாமால், விவேகத்தை காட்டுங்கள்’ என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோரை பாஜக தேசியத் தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற நோக்கில், திமுக – அதிமுக ஆதரவு அல்லாத பிற கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது.

இந்த சூழலில், அதிமுகவை பலவீனப்படுத்தவும் பாஜக காய்களை நகர்த்துவதாகக் கூறப்படுகிறது. இதற்காகவும், அண்ணாமலையை அதிவேக செயல்பாடுகளுக்கு செக் வைக்கும் வகையிலும் தமிழக விவகாரங்களை மேற்பார்வையிடும்படி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கோவைக்கு வந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இதில் ஹைலைட் என்னவென்றால், அதிமுக முக்கிய பிரமுகர்கள் 3 பேர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதுதான். பொள்ளாச்சி எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ செல்வராஜ், வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர். கோரிக்கைகளுக்காகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்த சந்திப்பு நடந்ததாக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் விளக்கம் தரப்பட்டாலும், இது பல்வேறு யூகங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

 

நிர்மாலா சீதாராமன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். ஏற்கனவே வேலுமணி பாஜக பக்கம் சாயக்கூடும் என்று தகவல்கள் வெளியான நிலையில், அப்படியெல்லாம் இல்லை; நான் எப்போதும் அதிமுககாரன் தான் என்று அவர் விளக்கம் அளிக்க வேண்டியதாயிற்று. இப்போது நிர்மலா சீதாராமனை, வேலுமணி ஆதரவாளர்களாக அறியப்படும் 3 முக்கியப் பிரமுகர்கள் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

 

இதுகுறித்து அதிமுக எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டபோது, “கடந்த மாதம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தென்னை விவசாயம் சார்ந்த மனுக்களை அளித்தோம். அப்போது கொடுத்த மனுவை மீண்டும் வலியுறுத்துவதற்காக, இன்றைய தினம் நிர்மலா சீதாராமனை சந்தித்து மீண்டும் வலியுறுத்தினோம். இதில் வேறு எந்த ஒரு அரசியல் காரணமும் கிடையாது. கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார்” என்றார்.

 

முன்னதாக, நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, அவரை பொள்ளாச்சி ஜெயராமன் அம்மா என்று குறிப்பிட்டார். இது குறித்து நிருபர்களிடம் விளக்கம் தந்த பொள்ளாச்சி ஜெயராமன், “எங்களை பொருத்தவரை ஒரே அம்மா எங்கள் புரட்சித்தலைவி அம்மா தான். மத்திய நிதி அமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக குறிப்பிட்ட சொல்லும் பொழுது அம்மா என்று குறிப்பிட்டோம்” என்று சமாளித்தார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் பலர் பாஜக அணிக்கு தாவினர். அதைப்போல் அதிமுகவை பிளவுபடுத்தி, எம்.எல்.ஏ.க்கள் சிலரை தங்கள் பக்கம் இழுத்து, அக்கட்சியையும் அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் பலவீனப்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

 

பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்திருந்த நிலையில், பாஜக முக்கிய பிரமுகருடனான அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும், அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon