தமிழகத்தில் கூட்டணி மாற்றம்…! அண்ணாமலைக்கு குட்டு… எடப்பாடிக்கு ரிவிட்டு! ஓபிஎஸ்-க்கு டிவிஸ்டு..!!
தனது பிடிவாதத்தால், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக்கூட்டணியை அண்ணாமலை பிளவுபடுத்திவிட்டதாகக் கருதும் டெல்லி பாஜக மேலிடம், இது தொடர்பாக அவரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளது. அதேநேரம், கூட்டணியை வலுப்படுத்த, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் கைகோர்க்கவும், பிடிவாதப்போக்குடன் உள்ள எடப்பாடிக்கு பாடம் புகட்டி, அவர் மீதான வழக்குகளை தீவிரப்படுத்தவும் டெல்லி தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், அக்கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இளைஞர்… ஐபிஎஸ் படித்தவர்… துடிப்பானவர் என்று கருதியே, அவரை இப்பணிக்கு பாஜக தலைமை தேர்வு செய்தது. அதற்கேற்ப, பாஜகவுக்கு தமிழகத்தில் அண்ணாமலை புது ரத்தம் பாய்ச்சி வருகிறார் என்பதை மறுப்பதற்கில்லை.
இதற்கு முன்பு இருந்த பாஜக தலைவர்களைக் காட்டிலும் தமிழகத்தில் தாமரையை பட்டிதொட்டியெங்கும் மணக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம், பாஜக துல்லியமாகச் செய்தது.

திமுக அரசு மீது புள்ளி விவரங்களுடன் ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி, அதன் மூத்த அமைச்சர்களுக்கு அண்ணாமலை சிம்மசொப்பனமாக இருந்து வருகிறார். இதனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீது விமர்சனம் செய்ய வேண்டிய திமுக தலைமை, தினமும் பாஜகவுக்கு குறிப்பாக அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
திறமை இருக்கு… அனுபவம் இருக்கா?
இதெல்லாம் அண்ணாமலை சாதனைகள் என்றால், அவரால் கட்சிக்கு சோதனைகளும் இல்லாமல் இல்லை. திமுகவை விமர்சிப்பதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, கூட்டணிக் கட்சியான அதிமுகவையும் அண்ணாமலை விட்டுவைக்கவில்லை. அண்ணாதுரை, ஜெயலலிதா மீதான அவரின் விமர்சனம், அதிமுக தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தன்னை விமர்சனம் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு கடும் வார்த்தைகளால் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இவ்வாறு கூட்டணிக் கட்சிகளை அனுசரித்து போவது கிடையது, செய்தியாளர்களிடம் ஆக்ரோஷம் காட்டுவது என்பது போன்ற அவரது செயல்பாடுகள், சொந்தக்கட்சிக்குள்ளேயே ஒரு தரப்பினர் மத்தியில் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, பாஜகவுடன் அதிமுக தனது கூட்டணியை முறித்துக் கொண்டதற்கு அண்ணாமலை ஒருவர் மட்டுமே காரணம் என்பது நிதர்சனமான உண்மை.
என்னதான் திறமைசாலி, துடிப்பானவர், மெத்தப்படித்தவர் என்றிருந்தாலும் அனுவபமும் மிக முக்கியமானது. அண்ணாமலையிடம் அனுபவம் குறைவு என்பதையே, அவரது இந்த செயல்பாடுகள் வெளிப்படுத்தி வருகின்றன. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த அதிமுக தலைவர்கள், அண்ணாமலையை தலைமைப் பதவியில் இருந்து தூக்க வேண்டுமென்று டெல்லி சென்று முகாமிட்டனர்.
ஆனால், அங்கு யாரையும் சந்திக்க முடியாமல் தொங்கிய முகத்துடன் தமிழகம் திரும்பினர். வேறுவழியின்று அரைகுறை மனதுடன், இறுதியாக பாஜகவுடன் உறவை அதிமுக முறித்துக் கொண்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு இது பெரும் இழப்புத்தான் என்றே சொல்லலாம்.
பாஜகவின் அடுத்த மாஸ்டர் பிளான்!
இதையடுத்து, திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறிவிடாமல் இருக்க, ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரனுடன் கைகோர்த்து செயல்படுவது என்று டெல்லி தலைமை விரும்புகிறது. பாஜக டெல்லி தலைவர்கள் இதற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதால், ஓபிஎஸ் மற்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர், நாளை அல்லது ஓரிரு தினங்களில் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அத்துடன், பாஜகவை மதிக்காமல் கூட்டணியை முறித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பலவீனப்படுத்தும் வகையில், டெல்லி பாஜக வியூகம் வகுத்து வருகிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏற்கனவே ஏழரையாக உள்ளது கொடநாடு கொலை வழக்கு. இந்த வழக்கை தீவிரப்படுத்துவதோடு அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த முறைகள் குறித்த விசாரணைகளை தூசிதட்டவும் திட்டமிட்டுள்ளனராம். தேர்தலுக்கு முன்பாக கொடநாடு வழக்கை முடித்தால், வாக்காளர்கள் மத்தியில் அதுபற்றிய பேச்சாகவே எங்கும் இருக்கும். இதெல்லாம் எடப்பாடிக்கு பெரும் சறுக்கலாக அமைந்துவிடும். எடப்பாடிக்கு உள்ள இந்த பலத்தையும், வசீகரத் தலைமை இல்லை என்ற அதிமுகவின் பலவீனத்தையும் சரியாகப் பயன்படுத்தி அறுவடை செய்ய பாஜக காத்திருக்கிறது. அதன்மூலம் அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள், எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று பாஜக நம்புகிறது.
அண்ணாமலைக்கு வாய்ப்பூட்டு!?
அதே நேரம், தலைமை அழைப்பின் பேரில் டெல்லி சென்றுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி நட்டா ஆகியோர் நன்றாக டோஸ் விட்டுள்ளனர். சொந்தக்கட்சியை வளர்க்க உழைப்பு முக்கியம், வேகமும் திறமையும் அவசியம்தான். அதற்காக முதிர்ச்சியின்றி செயல்படக்கூடாது, வாய்க்கு வந்ததெல்லாம் பேசக்கூடாது, அடக்கி வாசிக்க வேண்டுமென்று என்று டெல்லி தலைமை, அண்ணாமலைக்கு வாய்க்கடிவாளம் போட்டிருக்கிறதாம்.

எனவே, வரும் நாட்களில் அண்ணாமலையில் போக்கில் கொஞ்சம் நிதானத்தை பார்க்கலாம். மேலும், தமிழக பாஜக விவகாரங்களை மேற்பார்வையிட்டு கண்காணிக்கும்படி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, கமலாலய வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்.
மொத்தத்தில், டெல்லி பாஜக அண்ணாமலைக்கு ஒரு குட்டு வைத்திருக்கிறது. அதே நேரம் ஓபிஎஸ் – டிடிவி தினகரன் தரப்புடன் நெருக்கம் காட்டி எடப்பாடியின் தூக்கத்தையும் கெடுத்திருக்கிறது. பாஜகவின் அடுத்த கட்ட நகர்வுகள் நிச்சயம் தமிழக தேர்தல் களத்தில் கூட்டணிக் கணக்குகளை மாற்றலாம். எனவே, வரும் நாட்களில் அரசியலில் பெரும் டிவிஸ்ட்டுகள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




