மாந்திரீக பூஜை செய்த போலி சாமியார்…ஒருவர் பலி..!
தெலுங்கானாவில் உடல்நிலை சரியாக மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என அழைத்து செல்லப்பட்ட நபர் போலி சாமியாரின் கொடுமை தாங்காமல் உயிரிழந்தார்.
தெலுங்கானா மாநில மஞ்சுரியாலா மாவட்டத்தை சேர்ந்த மது பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். உடலில் தீய சக்தி சேர்ந்துள்ளதால் அது உடலில் இருந்து வெளியேறும் வரை உடல்நிலை சரியாகாது என போலி சாமியார் ஒருவர் கூறியுள்ளார்.
மேலும் தீய சக்தியை வெளியேற்ற மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் என சாமியார் கூறிய நிலையில் அதற்கு மதுவின் குடும்பத்தினரும் சம்மதித்துள்ளனர். கோதாவரி ஆற்றின் அருகே மதுவை அழைத்து சென்று மாந்திரீக பூஜை என்ற பெயரில் நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதில் மது உயிரிழந்த நிலையில் யாருக்கும் தெரியாமல் உடலை தகனம் செய்ய போலி சாமியார் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் போலி சாமியார் உடன் சென்ற மதுவின் உறவினர் ரகசியமாக தனது செல்போனில் எடுத்து காட்சிகளை காவல்துறைக்கு அனுப்பினார்.
உடனடியாக நிகழ்வு இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலி சாமியார் மற்றும் மதுவின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





