தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு..!
தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனினும் கோடை வெப்பம் அதிகரித்த நிலையில், முதலில் ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.
அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்றும் ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு நாளை மறுநாளும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, மேஜைகள், பெஞ்சுகள் துடைக்கப்பட்டு வகுப்பறைகள் தயாராக உள்ளன.
அரசுப் பள்ளிகளை பொறுத்தவரை, முதல் நாளே மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலவச பஸ் பாஸை பொறுத்தவரை சீருடை அணிந்து வரும் மாணவர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு இந்த ஆண்டு சற்று காலதாமதமாக தொடங்குவதால் அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே அறிவித்துள்ளார். நடப்பு கல்வி ஆண்டை பொருத்தவரை 210 வேலை நாட்கள் இருக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




