“மக்கள் நலனா? மதுக்கடை பணமா? கொந்தளித்த திருப்பூர் செல்லம்நகர் மக்கள்! தெற்கு தொகுதி அதிமுகவுக்கு சிக்கல்!!

திருப்பூர் செல்லம் நகரில், அதிமுக பிரமுகருக்கு சொந்தமான மதுபானக்கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெயரளவுக்கு வாக்குறுதி தந்து, சமாதானப்படுத்திவிட்டு, வழக்கம்போல் மதுக்கடையை இயங்க அதிகாரிகள் அனுமதித்தால், வரும் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு இப்பகுதியில் பெரும் பின்னடைவு ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 

டாலர் சிட்டியான திருப்பூர், பனியனால் எந்தளவுக்கு புகழ் பெற்றிருக்கிறதோ, அதே அளவுக்கு மதுபான விற்பனையால் அவப்பெயரையும் சந்தித்து வருகிறது. உழைக்கும் தொழிலாளர்கள் நிரம்பிய திருப்பூரில் பரவலாக எல்லா பக்கமும் மதுக்கடைகளும், மதுபான பார்களும் உள்ளன. வெளி மாநில மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள், வார இறுதி நாட்களில் மதுக்கடைகளிலே தங்கள் ஊதியத்தில் பெரும்பகுதியை கரைத்துவிடுகின்றனர்.

 

மதுபோதை தலைக்கேறிய நிலையில் ‘குடி’ மகன்களால் பெரும் தொந்தரவும், சட்ட ஓழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது. பாலியல் அத்துமீறல், பணியிடத்தில் பெண்களுக்கு தொந்தரவு, தகாத உறவு, போதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றுக்கும், இந்த மதுவே காரணமாகிவிடுகிறது.

 

அளவுக்கு மீறி அதிக எண்ணிக்கையில் திருப்பூரில் செயல்படும் மதுபானக்கடைகளால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அப்புறப்படுத்த வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை வைப்பதும், அரசியல் புள்ளிகள் பணத்தை கொடுத்து அதிகாரிகளை ‘அட்ஜெஸ்ட்’ செய்து, மதுக்கடைகளை தொடர்ந்து நடத்துவதும் திருப்பூரில் சகஜமாகிவிட்டது.

திருப்பூர் மாநகராட்சி 56வது வார்டுக்கு உட்பட்ட செல்லம் நகர் பகுதி மதுக்கடையும், இந்த ரகத்தில் சேர்ந்ததுதான். செல்லம் நகர், முருகம்பாளையம், பாரக்காடு, சூரியா நகர், பகவதி நகர் ஆகிய பகுதிகளுக்கு மையமாக உள்ள இடத்தில், இந்த டாஸ்மாக் மதுக்கடை (எண் .1965 ) செயல்பட்டு வருகிறது. மதுக்கடையை சுற்றிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கோவில், பெண்கள் அதிகளவு வந்து செல்லும் பனியன் நிறுவனங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ளன.

https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame&hl=en

 

பெண்கள், குறிப்பாக வேலைக்கு செல்வோர் இந்த மதுக்கடையை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும் போது, மது போதை தலைக்கேறிய நிலையில் ‘குடி’மகன்கள், பெண்களிடம் தகாத முறையில் நடக்க முற்படுகின்றனர். இதனால் அப்பகுதியை கடந்து செல்லவே பெண்களும், பொதுமக்களும் அஞ்சும் நிலை உள்ளது.

 

மதுக்கடையால் தினமும் பல தொல்லைகளை அனுபவித்து வந்த பொதுமக்கள், அதனை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலரிடம் பலமுறை மனு அளித்தனர். இதேபோல் தமிழக முதலமைச்சர், திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் உள்ளிட்டவர்களிடம் மனு தந்தும் எந்த பலனும் இல்லை. மக்களின் நலனைவிட வருவாய் தான் முக்கியம் என்பது போல், மனுக்களையெல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கோரிக்கையை சட்டை செய்யவில்லை.

 

மதுக்கடை விவகாரத்தில் இதுவரை அமைதிகாத்து வந்த செல்லம் நகர் பகுதி மக்கள், பொறுத்தது போதும் இனி பொங்கி எழுவோம் என்ற முழக்கத்துடன் இன்று (டிசம்பர் 31, 2020) செல்லம் நகரில் போராட்டத்தில் இறங்கினர். செல்லம் நகர் ஊர்மக்கள், ஊர் கோவில் கமிட்டி உறுப்பினர்கள், அப்பகுதியில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில், ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் எழுப்பிய கோஷம், விண்ணை அதிரச் செய்தது.

 

தகவல் அறிந்ததும் “குற்றம் குற்றமே” வார இதழ் சார்பில் அப்பகுதி சென்றோம். பொதுமக்களிடம் பேசியபோது, மதுக்கடையால் தாங்கள் சந்தித்து வரும் இன்னல்களை வேதனையோடு குறிப்பிட்டனர். மது போதையில் திரியும் நபர்களால் நாங்கள் நிம்மதியிழந்து இருக்கிறோம். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது. இனியும் செல்லம் நகரில் இந்த மதுக்கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க மாட்டோம். உடனடியாக மூட வேண்டும்.

 

பொதுமக்களின் நலனுக்காகத்தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் செயல்பட வேண்டுமே தவிர, மாமூல் வாங்கிக் கொண்டு அதிகார வர்க்கத்தினருக்கு ‘ஜால்ரா’ போடக்கூடாது. ஒருவேளை அதிகாரிகள் எங்கள் கோரிக்கைகளை வழக்கம்போல் கண்டுகொள்ளாமல், ஆளுங்கட்சி மதுக்கடை உரிமையாளருக்கு சாதகமாக செயல்பட்டால், வரும் தேர்தலில் நிச்சயம் தெற்கு தொகுதியில் ஆளுங்கட்சிக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க தயாராக உள்ளோம். தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட யார் தேர்தல் பிரசாரத்திற்கு இங்கு வந்தாலும், நிச்சயம் இந்த விவகாரத்தை கிளப்புவோம்.

 

மக்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் தமிழக அரசு, இனியாவது செல்லம் நகர் பகுதியில் இயங்கிவரும் மதுக்கடையை தாமதமின்றி மூட வேண்டும். இல்லையென்றால், இந்த விவகாரத்தில் மாபெரும் போராட்டத்தை அறிவித்து, முதல்மைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று பொதுமக்கள் கூறினர்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘மக்களால் நான், மக்களுக்காக நான்’ என்ற வாக்கின்படி செயல்படும் முதல்வர் பழனிச்சாமி அரசு, மதுக்கடையை அகற்ற உடனடியாக உத்தரவிட்டால், அதுவே செல்லம் நகர் பகுதி மக்களுக்கு சிறந்த புத்தாண்டு பரிசாக இருக்கும்.

 

ஆளுங்கட்சியினர்  சிந்திப்பார்களா?

சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் செல்லம் நகர் மதுக்கடை (எண்.1965), திருப்பூர் மாவட்ட மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதிக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. அதனால்தான், அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்காமல் சோம்பல் முறிப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

 

இதுகுறித்து, “குற்றம் குற்றமே” தரப்பில் அன்பகம் திருப்பதியிடம் கேட்டபோது, அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். ”சம்மந்தப்பட்ட மதுக்கடை தன்னுடையது அல்ல; பழனி என்பவர்தான் அதை நடத்தி வருகிறார். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால், மதுக்கடையை இடமாற்றம் செய்யும்படி அவரிடம் நான் கேட்டுக் கொண்டேன். ஆனால், அவர்தான் மதுக்கடையை இடமாற்றம் செய்யவில்லை” என்று அன்பகம் திருப்பதி நம்மிடம் கூறினார்.

 

மதுக்கடை யாருடையது என்பது பிரச்சனையல்ல; மதுக்கடையை மாற்ற வேண்டும் என்பதுதான் கோரிக்கை. திருப்பூர் ஆளுங்கட்சி பிரமுகர்கள், இக்கோரிக்கையை உடனே நிறைவேற்றினால், வரும் தேர்தலில் தெற்கு தொகுதியில் அது கைகொடுக்கும்.

 

கலெக்டர் களமிறங்கணும்!

மதுக்கடைக்கு எதிர்ப்பு குறித்து திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் துணை மேலாளரை “குற்றம் குற்றமே” வார இதழ் தரப்பில் தொடர்பு கொண்டு கேட்டோம்.

 

அவர் கூறுகையில் “செல்லம் நகர் மதுக்கடைக்கு எதிராக மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டவர்களிடம், பொதுமக்கள் புகார் அளித்திருப்பது உண்மைதான். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைத்ததும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

 

எனவே, செல்லம் நகர் பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவது, திருப்பூர் கலெக்டரின் கையில்தான் உள்ளது. மக்கள் நலனே பிரதானம் என்று செயல்பட்டு நல்ல பெயர் ஈட்டி வரும் நமது கலெக்டர், உடனே களமிறங்கி, மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும். நிச்சயம் செய்வார் என்று நம்புவோம்.


Leave a Reply