38 வயதில் எச்‌சி‌எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரோஷ்னி..!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்‌சி‌எல்லின் தலைவராக ரோஷினி நாடார் மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக இவர் பார்க்கப்படுகிறார். நெல்லையைச் சேர்ந்த ஷிவ் நாடார் எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரின் ஒரே மகள்தான் ரோஷினி.

 

38 வயதில் முன்னணி ஐடி நிறுவனத்தின் தலைவராக உயர்ந்துள்ள ரோஷினி அமெரிக்காவிலுள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், கேலாங் கல்லூரி நிர்வாகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பல நிறுவனங்களில் பணியாற்றிய இவர்எச்‌சி‌எல் நிறுவனத்தில் சேர்ந்து ஓராண்டுக்குள் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் போக்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். ஐ‌ஐ‌எஃப்‌எல் என்ற அமைப்பின் தரவுகளின்படி இந்தியாவின் பணக்கார பெண்ணாக இருந்து வரும் இவரின் சொத்து மதிப்பு சுமார் 36 ஆயிரத்து 800 கோடி ரூபாய் ஆகும். வர்த்தகம் தவிர இசை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் கர்நாடக சங்கீதம் பயின்று உள்ளார்.

 

எச்‌சி‌எல் நிறுவனத்தின் உடல் நலம் சார்ந்த அமைப்பின் துணைத் தலைவராக உள்ள சிகர் மல்கோத்ராவை மணந்து கொண்ட ரோஷினுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். எச்‌சி‌எல்லின் தொண்டு நிறுவனத்தை நிர்வகித்து வரும் ரோஷினி உயிரினங்களை பேணுவது மற்றும் வாழ்விடம் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

 

எச்‌சி‌எல் நிறுவனத்தின் வாழ்விடம் பாதுகாப்பு தொடர்பான அமைப்பின் நிறுவனர் ஆகவும் இவர் இருந்து வருகிறார். பன்முகத்தன்மை கொண்ட இவர் கொரொனா தொற்றால் பொருளாதார நெருக்கடி சுழலில் சிக்காமல் எச்சிஎல் நிறுவனத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Leave a Reply